Sunday, October 13, 2013

பிறை ஓர் ஆய்வு!

மனிதர்களுக்கிடையே ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை வழங்கக் கூடிய வகையில் அல்லாஹ் குர்ஆனை அருளியுள்ளான். குர்ஆனில் இருந்து அனைத்து விஷங்களுக்கும் விளக்கம் பெறவேண்டிய முஸ்லிம்கள் குர்ஆனை உரிய முறையில் படிக்காமல் இருப்பதன் காரணமாக பல விஷயங்களில் முரண்பட்டுச் செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். குறிப்பாகப் பிறை விஷயத்தில் கருத்து வேறுபாடுக் கொண்டு தாங்கள் சொல்லும் கருத்து மட்டும் தான் சரியானது என்று அனைத்துத் தரப்பினரும் கூறி வருகிறார்கள். இந்தக் கருத்து வேறுபாட்டிற்குக் காரணமாக இருப்பது ஹதீஃத்களைப் புரிந்து கொள்ளும் விதத்தில் ஏற்பட்டத் தவறேயாகும். எனவே இதுபற்றி விரிவாகப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் (மறு) பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு (பிறை) மறைக்கப்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரீ 1909
மேற்கண்ட ஹதீஃதை ஆதாரமாகக் கொண்டு பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் நோன்பு வைக்க வேண்டும். கண்ணால் பார்த்துத்தான் நோன்பை விட வேண்டும் என்று கூறி வருகிறோம். இந்த வாதம் சரிதானா என்பதை குர்ஆனில் இருந்து பார்ப்போம்.
அல்லாஹ் கூறுகிறான்…! உங்களில் அம்மாதத்தை அடைபவர் நோன்பு நோற்கட்டும்… குர்ஆன் 2:185 மாதத்தை அடைதல் என்பது பிறையைக் கண்ணால் பார்த்தும் இருக்கலாம். இன்னும் ஆய்வு, தகவல் போன்றவைகளாலும் இருக்கலாம். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களை மனித குலம் முழுமைக்கும் தூதராக அல்லாஹ் அனுப்பியுள்ளான். (பார்க்க குர்ஆன் 7:158, 4:79) ஆகையால்தான் நபி(ஸல்) அவர்கள் எல்லா காலத்திற்கும் பொருந்தும் வகையில் கண்களால் பார்த்தல், மற்றும் ஆய்வு, தகவல் ஆகியவற்றை உள்ளடக்கிய வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். மாறாகக் கண்களால் மட்டும் பிறை பார்த்து என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. (நபியே) யானைப் படையினரை உமது ரப்பு எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? (குர் ஆன் 105:1) என்று அல்லாஹ் கேட்கிறான். நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்குப் பல மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வை நபி(ஸல்) அவர்கள் கண்களால் பார்த்தா அறிந்திருப்பார்கள். மேலும் இரு வசனங்களைப் பாருங்கள்.
மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டும் வெளியேறியோரை நீர் அறியவில்லையா? (குர்ஆன் 2:243) ஆது தூண்களுடைய இரம் சமுதாயங்களை உமது ரப்பு எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? (குர்ஆன் :89:6,7) நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை அறியவில்லையா? என்று அல்லாஹ் கேட்பது தகவல் அடிப்படையில் கிடைத்த விஷயத்தை தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் பிறைப் பார்த்தல் சம்பந்தமாக வரும் விரிவான பொருள் கொண்ட ஹதீஃதிற்கு கண்களால் மட்டுமே பிறையை பார்ப்பது என்ற அர்த்தத்தைக் கொடுப்பது குர்ஆனுக்கு எதிரானதாகும்.
நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கு குர்ஆனைக் கொண்டு பொருள் கொடுக்கலாம். நம் மன இச்சைகளின் அடிப்படையில் விளக்கம் கொடுத்தால் அத்தகைய விளக்கம் நம்மை வழிகேட்டிற்குத்தான் அழைத்துச் செல்லும். உதாரணத்திற்கு சில ஹதீஃத்களைப் பார்ப்போம். ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் “”முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எவருடைய நாவிலிருந்தும், கையிலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்) என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) நூல்: முஸ்லிம் 64
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் யார் (பொய்) சத்திம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான். சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் “”அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆம் “”மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஉமாமா(ரழி)  நூல்:முஸ்லிம் 218
மேற்கண்ட ஹதீஃத்களை மேலோட்டமாகப் பார்த்து விட்டு முஸ்லிமிற்குதான் தொந்தரவு தரக்கூடாது. முஸ்லிமின் உரிமையைத்தான் பறிக்கக் கூடாது. காஃபிர்களுக்குத் தொந்தரவு செய்யலாம். அவர்களின் உரிமையைப் பறிக்கலாம் என்று பொருள் செய்தால் அது வழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும். ஏனென்றால் (நபியே) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம். (குர்ஆன் 21:107) என்று நபியைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்தின் அடிப்படையில் உலக மக்கள் எவருடைய உரிமையையும் பறிக்கக் கூடாது என்று இத்தகைய ஹதீஃத்களுக்குப் பொருள் கொடுத்தால்தான் நேர்வழியை அடைய முடியும்.
தனது (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் உயர்ந்தோன் அல்லாஹ் ஏழு சாராருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்களில் நீதி வழுவா ஆட்சியாளரும் ஒருவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்: புகாரீ: 1423
இந்த ஹதீஃதின் அடிப்படையில் ஒருவர் காஃபிராக இருந்தாலும் நீதி வழுவாமல் ஆட்சி செய்தால் அவர் சொர்க்கம் செல்வார் என்று பொருள் செய்தால் அது தவறான விளக்கம். ஏனென்றால் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது. (குர்ஆன் 29:58) இதே கருத்தில் ஏராளமான வசனங்கள் உள்ளன. இந்த வசனங்களின் அடிப்படையில் ஈமானுடன் நற்செயல்கள் செய்து நீதி வழுவாமல் ஆட்சி செய்பவருக்குத்தான் அர்ஷின் நிழல் கிடைக்கும் என்று பொருள் செய்வோம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தனியாகப்) பயணிக்கும் ஒருவர் ஒரு ஷைத்தான் ஆவார் (தனியாகப்) பயணிக்கும் இருவர் இரு ஷைத்தான்கள் ஆவர். மூவரே பயணக் குழுவினர் ஆவர்.  அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அமர்பின் ஆஸ்(ரழி), நூல்: திர்மிதி 1597 அபூதாவூத் 2240
கோவை, திருப்பூர், சேலம் போன்ற ஊர்களிலிருந்து ஜுமுஆ பயான் மற்றும் தெருமுனைக் கூட்டங்களில் பிரச்சாரம் செய்ய அழைப்பாளர்கள் தனியாகப் பிரயாணம் செய்து வருகிறார்கள். அப்படி தனியாக வருகிறவர்களை இந்த ஹதீஃதின் அடிப்படையில் ஷைத்தான் வந்து விட்டார் என்று கூறுவோமா? ஒருபோதும் அவ்வாறு கூறமாட்டோம். மாறாக இப்ராஹீம் நபி, துல்கர்னைன் போன்றோர் தனியாக பிரயாணம் செய்துள்ளனர். (குர்ஆன் 29:26, 18:85) மூஸா நபி தனது ஊழியருடன் சேர்ந்து இரண்டு பேராக பயணம் செய்துள்ளார்கள். (குர்ஆன் 18:62. 67) ஆகிய வசனங்களின் அடிப்படையில் தனியாகவோ, இருவராகவோ பயணம் செய்ய தடையில்லை என்றே கூறுவோம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீர் தொழுகையில் இருக்கும்போது (உமிழ வேண்டியதேவை ஏற்பட்டால்) உமக்கு வலப் பக்க மாக உமிழாதீர். மாறாக உமக்கு பின் பக்கத்திலோ அல்லது இடப்பக்கத்திலோ, அல்லது உமது இடப் பாதத்தின் அடியிலோ உமிழ்ந்து கொள்வீராக.
அறிவிப்பாளர் : தாரிக் பின் அப்தில்லாஹ்(ரழி) நூல்: திர்மிதி 521
இந்த ஹதீஸின் அடிப்படையில் சிமெண்ட், மார்பிள்ஸ், மொசைக், டய்ல்ஸ் போன்றவற்றால் தரைத்தளம் கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலிலும் உமிழலாம் என்று முடிவு செய்வோமா? அல்லது மாற்று விளக்கம் தருவோமா?
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மலஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கி அமர வேண்டாம். அதற்குப் புறம் காட்டியும் அமரவேண்டாம். மாறாக கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பி (அமர்ந்து) கொள்ளுங்கள். அறிவிப்பாளர்: அபூ அய்யூப்(ரழி) நூல் : திர்மிதி 8
இந்த ஹதீஃதின் அடிப்படையில் நமக்கு கிப்லாவான மேற்கு நோக்கி மலஜலம் கழிக்கலாம் என்று கூறுவோமா? அல்லது மாற்று விளக்கம் தருவோமா? இது போன்ற மாற்று பொருள் கொடுத்து நாம் பின் பற்றும் ஹதீத்கள் நிறைய உள்ளன. அப்படியிருக்கையில் பிறை சம்பந்தப்பட்ட ஹதீஃதை உலக மக்கள் அனைவருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் மாற்றுப் பொருள் கொடுக்கும் விதமாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருந்தும் அதற்கு உரிய பொருளைத் தர மறுப்பது நியாயம்தானா?
மனித உயிர்களைக் காப்பதற்காக இரத்த தானம் செய்து வருகிறோம். நபி(ஸல்) அவர்கள் தமது தலையின் நடுவே இரத்தம் உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். (புகாரீ 5698) இந்த ஹதீஃதின் அடிப்படையில் இரத்தம் உறிஞ்சி மட்டுமே எடுக்க வேண்டும். பிறருக்கு இரத்தத்தை செலுத்தக் கூடாது என்று ஒருவர் நம்மிடம் கூறினால் நபி(ஸல்) அவர்களது காலத்தில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கு கருவி இருந்தது; பிறருடைய உடலில் செலுத்தும் வகையில் கருவிகள் கிடையாது. ஆனால் நாம் வாழக்கூடிய இக்காலத்தில் இத்தகைய கருவிகள் உள்ளதால் தாராளமாகப் பிறருக்கு இரத்தத்தை ஏற்றலாம். மேலும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (குர்ஆன் 5:32) என்ற வசனத்தையும் ஆதாரமாகக் காட்டி இரத்த தானம் செய்யலாம் என்றே பதிலளிப்போம்.
இதே அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் சூரிய, சந்திர ஓட்டங்களை மிகத் துல்லியமாகக் கணக்கிடும் முறைகள் இருக்கவில்லை. ஆகவே அந்தக் காலத்தில் உள்ளவர்கள் கண்களால் சூரிய ஓட்டத்தைப் பார்த்துத் தொழுதார்கள்; பிறைகளைப் பார்த்துச் செயல்பட்டார்கள். ஆனால் இன்று சூரிய, சந்திர ஓட்டங்களை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும் அறிவு உள்ளதால் பிறையைப் பார்த்து செயல்படவேண்டியதில்லை என்று கூறித் துல்லியக் கணக்கீட்டு முறையில் நோன்பை ஆரம்பித்து நோன்பை முடிப்பது எந்த வகையில் தவறாகும்?
இன்னும் தெளிவாச் சொல்வதென்றால் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய வணக்க வழிபாடுகளில் மாற்றம் செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால் அந்த வணக்க  வழிபாடுகளை அடைந்து கொள்ளும் வழிமுறைகளில் மாற்றம் ஏற்படவே செய்யும். இந்த மாற்றங்களை அல்லாஹ்வும் தடை செய்யவில்லை. அல்லாஹ்வின் தூதரும் தடை செய்யவில்லை. உதாரணத்திற்குச் சில விஷயங்களைப் பார்ப்போம்.
1. ஹஜ் செய்வது வணக்க வழிபாடாகும். இந்த வழிபாட்டை செய்வதற்காக நபி(ஸல்) அவர்களது காலத்தில் ஒட்டகம், குதிரை, கோவேறி கழுதை போன்ற வாகனங்களை மட்டுமே பயன் படுத்தியிருப்பார்கள். அல்லாஹ்வும் 22:27 இறை வாக்கில் மெலிந்த ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்றே கூறுகிறான். ஆகவே நாமும் இத்தகைய வாகனங்களில்தான் ஹஜ்ஜுக்குப் போக வேண்டும் என்றில்லை. மாறாக இன்றைய நவீன வாகனங்கள் எதைப் பயன்படுத்தி ஹஜ்ஜுக்கு போனாலும் ஹஜ்ஜின் நோக்கத்திற்கு மாற்றமாக நாம் எதையும் செய்யவில்லை.
2. பல் துலக்குவது வணக்க வழிபாடு; நபி(ஸல்) அவர்கள் குச்சியால் பல் துலக்கினார்கள் என்பதற்காக எல்லோரும் குச்சியால்தான் பல் துலக்க வேண்டும் என்றில்லை. இன்றுள்ள பேஸ்ட், பிரஸ் மூலமாக பல் துலக்கினாலும் நாம் நபி வழியை நடைமுறைப்படுத்தியவர்கள் ஆவோம். பேஸ்ட் பிரஸ் மூலமாக பல் துலக்குபவர்களை நபி வழிக்கு மாற்றம் செய்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
3. அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது வணக்க வழிபாடு: நபி(ஸல்) அவர்களது காலத்தில் ஈட்டி, கேடயம், வாள், அம்பு போன்றவற்றை ஜிஹாதுக்குப் பயன்படுத்தியுள்ளனர். நாமும் ஜிஹாதுக்கு இத்தகைய ஆயுதங்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. மாறாக எதிரிகள் எத்தகைய நவீன ஆயுதங்களைக் கொண்டு வருகிறார்களோ அதைப் போன்ற ஆயுதங்களைக் கொண்டே போரிடுவோம். இது நபிவழியை மீறிய செயலாக ஆகுமா?
4. கணவன் இறந்தவுடனே மனைவி இத்தா இருப்பது வணக்க வழிபாடு: நபி(ஸல்) அவர்களது காலம் உட்பட கடந்த பல நூற்றாண்டுகளாக ஹஜ் மற்றும் தொலை தூரப் பயணம் போன ஒருவர் மரணித்துவிட்டால் அவருடன் பயணம் சென்றவர் திரும்பி உள்ளூருக்கு வந்த பிறகு இறந்தவரின் மனைவியிடம் தகவல் சொன்ன பிறகே இத்தா இருக்கும் நிலை இருந்துள்ளது. ஆனால் இன்று ஹஜ் மற்றும் தொலைதூரப் பயணம் சென்ற ஒருவர் இறந்த சில நிமிடங்களில் அவரது மனைவிக்குத் தகவல் தரக்கூடிய அளவுக்கு தொலை தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்டன. இந்தத் தொலை தொடர்பு மூலம் தகவல் கிடைத்தவுடன் அந்தப் பெண்மணி இத்தா இருந்தால் இது நபிவழிக்கு எதிரான செயல் என்று கூற முடியுமா?
5. நபி(ஸல்) அவர்களது காலத்தில் அகலமான எலும்புகள், தோல்கள், கற்கள் ஆகியவற்றில் குர்ஆன் எழுதப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் நவீன பல சாதனங்களைக் கொண்டு குர்ஆனை நாம் எழுதுகிறோம். இது நபி வழிக்கு எதிரானதல்ல.
6. வெளியூரிலிருந்து பயணம் முடித்துவிட்டு இரவில் திடீரென தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம். உள்ளூருக்குள் வந்த பின் தன் மனைவிக்குத் தகவல் தந்த பிறகே வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இன்று வெளியூரிலிருந்து கிளம்பும் கணவன் உள்ளூருக்குள் வருவதற்கு முன்பாகவே ஃபோன் மூலமாக மனைவிக்குத் தகவல் கூறி விட்டு இரவில் வீட்டிற்குச் செல்வது நபி வழிக்கு எதிரானதல்ல.
7. நபி(ஸல்) அவர்களது காலத்தில் பேரீச்சை பழம், கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக்கட்டி ஆகிய பொருள்களே ஃபித்ராவாக இருந்தன. ஆனால் தற்போது நாம் பணம், அரிசி, கறி மற்றும் மளிகைப் பொருட்களை ஃபித்ராவாக கொடுத்து வருகிறோம். இது நபி வழிக்கு எதிரானது என்று யாரும் கூறுவது கிடையாது.
இதைப் போன்றே நோன்பு வைப்பது வணக்க வழிபாடாகும். இந்த வணக்க வழிபாட்டை அடைவதற்காக நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்த எளிதான ஒரே வழி பிறைகளைக் கண்களால் பார்ப்பது மட்டுமே. ஆனால் நாம் வாழக்கூடிய இன்றைய காலத்தில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுள்ள பிறைகளையும் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும் அறிவை அல்லாஹ் வழங்கியுள்ளான். இந்த வழிமுறையைப் பின்பற்றி நோன்பை ஆரம்பித்து, நோன்பை விடுவது நபி வழிக்கு எதிரானதல்ல என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
கணக்கீடு அடிப்படையில் பிறைகளைத் தீர் மானிக்கக் கூடாது. கண்களால்தான் பிறைகளைப் பார்க்க வேண்டும் என்று கூறுபவர்கள் தங்களின் வாதத்திற்கே முரண்பட்டு பிறையைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் கணக்கீட்டு முறைகளையே கடைபிடித்து வருகிறார்கள். ஆகவே இத்தகையவர்கள் உணர்ந்து கொள்வதற்காக சில கேள்விகளை முன் வைக்கிறோம்.
1. நபி(ஸல் அவர்களது காலத்தில் ஸஹரின் இறுதி நேரத்தை வானத்தைப் பார்த்து முடிவு செய்தார்கள் எனும்போது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தாங்கள் கடிகாரத்தைப் பார்த்து ஸஹ்ரின் இறுதி நேரத்தை முடிவு செய்கிறீர்கள்?
2. நபி(ஸல்) அவர்களது காலத்தில் சூரியன் மறைவதைக் கண்ணால் பார்த்த பிறகே நோன்பை துறந்துள்ளனர். அப்படியிருக்கையில் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நோன்பு துறக்கும் நேரத்தை முன்கூட்டியே அறிவிக்கின்றீர்கள்?
3. நபி(ஸல்) அவர்களது காலத்தில் கிரகணம் ஏற்பட்டதை கண்ணால் பார்த்த பிறகே மக்களுக்கு அறிவிப்புச் செய்து கிரகணத் தொழுகையை தொழுதுள்ளார்கள். ஆனால் இன்று கிரகணம் நடப்பதற்கு பல நாட்களுக்கு முன்பே மக்களுக்கு அழைப்புக் கொடுத்து கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தையும், முடியும் நேரத்தையும் அறிவித்து விட்டு கிரகணத் தொழுகை தொழுகிறீர்கள். இது உங்களின் கருத்துப்படி நபிவழிக்கு மாற்ற மில்லையா?
4. 15.01.2010 அன்று நிகழ்ந்த சூரிய கிரகணம் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா சீனா மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலும், இக்கிரகணம் கங்கண சூரிய கிரகணமாக தெரியும். இக்கிரகணம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் 11 நிமிடங்கள் 8 வினாடிகளுக்கு கங்கண சூரிய கிரகணமாகத் தெரியும். இனி கி.பி. 3043ஆம் ஆண்டில்தான் இது போன்றதொரு கிரகணம் நிகழும். தமிழ் நாட்டில் அடுத்த முழு சூரிய கிரகணம் கி.பி. 2168ஆம் ஆண்டு ஜூலை 5ம் தேதியன்று ஏற்படும் என்கிற விபரங்களையெல்லாம் 2010 ஜனவரி ஏகத்துவம் இதழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. பிறையைக் கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சூரிய கிரகணத்தை முன்கூட்டியே அறிவிப்பது தாங்கள் கூறும் கொள்கைக்கு மாற்றமாகத் தெரிய வில்லையா?
5. நபி(ஸல்) அவர்கள் எத்தனை முறை சூரிய கிரகணத் தொழுகையைத் தொழுதுள்ளார்கள்?
6. நபி(ஸல்) எத்தனை முறை சந்திர கிரகணத் தொழுகையைத் தொழுதுள்ளார்கள்.
7. கணக்கீடு துல்லியமாக இருக்கும் என்று சொல்லி கொண்டே கணக்கீட்டை ஏற்க மறுக்கிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் நீங்கள் கூறுவதை போன்று கணக்கீடு சரியாகத்தான் இருக்கும் இருந்தாலும் பிறையைக் கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்களா?
8. இன்று பிறை பார்க்கும் குழுவை நியமித்து செயல்படுவதைப் போல் நபி(ஸல்) அவர்கள் பிறை பார்க்கும் குழுவை நியமித்திருந்தார்களா?
9. ­ஷஃபான் 29ஆம் நாளை சந்தேகத்திற்குரிய நாள் என்று கூறிக் கொண்டு அன்றைய இஷா தொழுகையை வழமைக்கு மாற்றமாக பிறை தகவலை எதிர்பார்த்துத் தாமதமாக தொழுது வருகிறீர்கள். இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்களா? பிறையைக் கண்களால் பார்த்துதான் நோன்பு வைக்க வேண்டும் என்ற கொள்கையில் தாங்கள் உண்மையாளர்களாக இருந்தால் மஃரிபு நேரத்தில் பிறையை பார்க்க வேண்டும்; பிறை தென்படவில்லையயன்றால் உடனே ஷஃபானை 30 ஆக அறிவிப்பதுதானே முறையான செயல். இவ்வாறு ஏன் நடந்து கொள்வதில்லை?
10. ரஅய்த்து என்ற வார்த்தைக்கு கண்களால் மட்டுமே பார்த்தல் என்ற பொருளில்தான் குர்ஆன், ஹதீஃதில் கூறப்பட்டுள்ளதா?
11.என்னை எவ்வாறு தொழப் பார்த்தீர்களோ அவ்வாறே தொழுங்கள் என்ற ஹதீஃதின் அடிப்படையில் தொழுகிறோம். நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டியதை நம் கண்கள் பார்த்ததன் அடிப்படையிலா? அல்லது தகவலின் அடிப்படையிலா?
12.நபி(ஸல்) அவர்கள் என்னை எவ்வாறு தொழப் பார்த்தீர்களோ அவ்வாறே தொழுங்கள் என்று கூறியுள்ளார்கள். நான் நபி(ஸல்) அவர்கள் தொழுததை கண்களால் பார்க்கவில்லை; ஆகவே நான் நபி(ஸல்) அவர்கள் தொழுவதை பார்க்கும் வரை தொழமாட்டேன் என்று ஒருவர் கூறினால் அவரை சரியான முறையில் ஹதீஃத்களைப் புரிந்து செயல்படுகிறார் என்று கூறுவீர்களா?
13. இப்ராஹீம் நபி, யூஸுஃப் நபி ஆகியோர் கண்களால்தான் கனவு கண்டார்களா?
14. தத்தமது பகுதியில் பிறை பார்த்ததன் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும். பக்கத்து மாவட்டம் உட்பட எந்த வெளியூர் தகவலையும் ஏற்க கூடாது என்று 1999லிருந்து 2008 வரை கூறி வந்தீர்கள். ஆனால் இவ்வாறு வாயளவில் மட்டும் சொல்லிக் கொண்டு அதை யாராலும் நடைமுறைப்படுத்த முடியாமல் இந்தக் காலக் கட்டங்களில் பலமுறை வெளியூர் தகவலைக் கொண்டே செயல்பட்டு வந்தீர்கள். பிறகு தமது மாவட்டம்தான் தமது பகுதி என்று ஒரு பகுதியினர் முடிவு செய்தால் அதற்கு எவ்வாறு உரிமையுள்ளதோ அதேபோல் தமது மாநிலம்தான் தனது பகுதி என ஒரு ஊரார் முடிவு செய்தால் அதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது என 14.10.2008 அன்று நடந்த பிறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்தீர்கள். இங்கு எழும் கேள்வி என்னவென்றால் ஒரு ஊரார் இந்தியா முழுவதையும் தத்தமது பகுதியாக கருதிச் செயல்பட்டால் அதைத் தடுக்கும் ஆதாரம் உள்ளதா?
15. நீங்கள் தீர்மானிக்கும் நாள் என்பது ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குறிப்பிடும் வாசகம் என்று பிறை விஷயத்தில் மாற்று கருத்துடைய வர்கள் சொன்னபோது இது விசித்திரமான விளக்கம் என்று பிறை – ஓர் ஆய்வு புத்தகத்தில் எழுதி விட்டு பிறகு, நீங்கள் தீர்மானிக்கும் நாள் என்பது ஒட்டுமொத்த அல்லது மிகப் பெரும் பான்மையானவர்களின் முடிவு என்பதே பொருளாக இருக்க முடியும் என்று தற்போது கூறி வருகிறீர்கள். விசித்தரமான விளக்கத்தை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சரி கண்டீர்கள்?
16. பிறையைக் கண்களால் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருந்தால் கிராமவாசிகள் மற்றும் வாகனக் கூட்டத்தினர் பிறைத் தகவலை சொல்லும்போது பிறையை கண்களால்தான் பார்க்க வேண்டும் என்று நான் கூறியிருக்கும்போது அதற்கு மாற்றமாக ஏன் செயல்படுகிறீர்கள் என்று பிறைத் தகவல் தந்தவர்களை நபி(ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்களே? அப்படி ஏதும் கண்டிக்கவில்லை எனும்போது நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே பிறை விஷயத்தில் தகவலை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குச் சமுதாயம் உயர்ந்து விட்டதைக் காட்டவில்லையா?
17. நீங்கள் தீர்மானிக்கும் நாள்தான் நோன்புப் பெருநாள் என்ற ஹதீஃதின் அடிப்படையில் பிறை பார்த்த பிறகும் பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்து வேறு ஒருநாளைப் பெருநாளாக அறிவிப்புச் செய்யலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது என்று கூறுவீர்களா?
18. பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் மாதத்தைத் துவக்க வேண்டும் என்று கூறக்கூடிய நீங்கள் எந்த அடிப்படையில் காலண்டரை வெளியிடுகிறீர்கள் என்று கேட்டால் எங்கள் காலண்டர் அனுமானம் செய்யப்பட்ட காலண்டர் எனக் கூறுகிறீர்கள். அனுமானம் செய்வது யாருடைய பண்பு? மேலும் மிகத்துல்லியமான முறையில் சந்திர காலண்டரை வெளியிடும் நிலையில் இருந்து கொண்டு அனுமானம் செய்யப்பட்டக் காலண்டரை வெளியிடுவது எந்த வகையில் நியாயம்?
19. குர்ஆன் 8:60வது வசனத்தில் பலத்தைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். பலம் என்பது அம்பெய்வதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அம்புதான் பலம் என்பது அந்தக்கால மக்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதா? அல்லது பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் உள்ள மக்களுக்காகவும் சேர்த்துச் சொல்லப்பட்டதா?
20. நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைவதைக் கண்ணால் பார்த்து நோன்பை துறந்தார்கள். ஆகவே

சகோதரர்களே! இந்தப் பிரசுரத்தைப் படித்த பிறகு இந்தப் பிரசுரத்தில் உள்ள கருத்துகளை நீங்களே நடுநிலையோடு படித்து உண்மை எது என்பதை விளங்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
“”உங்கள் ரப்பிடமிருந்து சான்றுகள் உங்களிடம் வந்துவிட்டன. அதைக் கவனிப்போருக்கு அது நன்மையாகும். அதை பார்க்காதிருப்போருக்கு அது கேடாகும்; நான் உங்களுக்குக் காவலன் இல்லை” (என்று நபியே கூறுவீராக)  குர்ஆன் 6:104)
குறிப்பு : 1. பிறைகளைக் கண்ணால் பார்த்துத் தான் மாதத்தை தீர்மானிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் கணக்கீடு அடிப்படையில் தொழுகை நேரத்தைத் தீர்மானித்துத் தொழுவது தவறு.

0 comments:

Post a Comment